மாவீரர்களின் நினைவுகளுடன்
ஓ..என் நண்பனே..! மாவீரனே..!
மாற்றான் குண்டுகள் - உன்
மார்பைத் துளைத்தனவோ!
மாமனிதன் உன்னை
மண்ணில் சாய்த்தனவோ!
சிதறிய தேங்காய் போல்
சில்லாகிப் போனாயோ! - அன்றி
நரிகள் கையில் சிக்காது
நஞ்சை நீ மென்றாயோ!
சூரியக் கதிர் சமர்தனிலே
சூரியன் நீ அணைந்தாயே!
ஈன்றெடுத்த மண்தனிலே
இரத்த விதை விதைத்தாயே!
மாவீரர் சமாதியிலே
மறவனாய் மலர்ந்தாயே
வெளிநாட்டுத் தமிழருக்கும்
வெகுட்சி வரச் செய்தாயே!
வெங்கதிர்ச் செல்வன் படைதனிலே
வேங்கையாய் பாய்ந்தவனே
வேட்டை ஆட வந்தவரை
வெட்டிப் புதைத்தவனே
ஊர் உறவு வாழ்வதற்காய்
உறங்காமல் உழைத்தவனே!
உறங்காமல் உழைத்ததினால் - இன்று
உறக்கத்தில் போனாயோ!
மண்ணோடு நீ கலந்து
மலராகிச் சிரிக்கின்றாய்
விண்ணோக்கி நான் பார்த்தால்
விண் மீனாய் ஒளிர்கின்றாய்
வாள் ஏந்தும் வீரருக்கு
வேராக நிற்கின்றாய்
விடிவு தேடும் மக்களுக்கு
விடிவெள்ளி நீ தானே.......
மக்கள் வாழ
மக்கள் வாழும் மண்ணது மீள
கற்கை மறந்து
தாயின் தழுவல் பொற்கை மறந்து
சொந்த வீட்டுப் படுக்கை மறந்து
புதுத் தளிர்க்கை மறந்து
மண்ணிலே தவழ்ந்து
மண்ணிலே நடந்து
மண்ணையே குருதியால் நனைத்து
மண்ணுக்காய் உரமாகி கண்ணொத்த விடுதலைக்காய்
விண்ணையே அளந்த....
மாவீரர்களின் ஈர நினைவுகளுடன்.
Comments
Post a Comment